கன்னியாகுமரி
பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கனஅடி நீர் வெளியேற்றம்
|குமரியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
நாகர்கோவில்,
குமரியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 684 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.
சாரல் மழை
குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் அணைகளின் நீர்மட்டம் சரிவடைந்து வருகிறது. பாசன குளங்களுக்கும் போதுமான அளவு தண்ணீர் இல்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை காணப்பட்டது.
மலையோரம் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வானில் கார்மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. பின்னர் மழை பெய்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்ற மாணவ- மாணவிகள், அலுவலக பணியாளர்கள் குடைகள் பிடித்தப்படி சென்றனர். மழையால் மாநகரில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து சாலையில் சென்றதையும் காணமுடிந்தது.
மழை அளவு
நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவானது. இதேபோல மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பூதப்பாண்டி- 6.2, சிற்றார் 1- 5, களியல்- 6, கன்னிமார்- 8.4, கொட்டாரம்- 2.6, மயிலாடி- 2.6, குழித்துறை- 4.6, நாகர்கோவில்- 5.4, பேச்சிப்பாறை- 12, பெருஞ்சாணி- 7.2, புத்தன் அணை- 8, சிற்றார் 2- 6.4, சுருளோடு- 18.6, பாலமோர்- 13.4, மாம்பழத்துறையாறு- 8.4, திற்பரப்பு- 10.9, ஆரல்வாய்மொழி- 1, கோழிப்போர்விளை- 4.2, அடையாமடை- 4.1, முள்ளங்கினாவிளை- 18.2, முக்கடல் அணை- 6.2 என பதிவாகி இருந்தது. அதேசமயம் பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 435 கனஅடிநீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 684 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 207 கனஅடிநீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.