மயிலாடுதுறை
672 மதுபாட்டில்கள்-220 லிட்டர் சாராயம் பறிமுதல்
|மயிலாடுதுறை அருகே மதுவிலக்குபிரிவு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் சாராயம், 672 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை அருகே மதுவிலக்குபிரிவு அமலாக்கத்துறை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 220 லிட்டர் சாராயம், 672 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தி வந்த கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.
வாகன தணிக்கை
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து சாராயம், மதுபாட்டில்களை கடத்தி வந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க மாவட்ட போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் கடத்தலை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் காரில் கடத்தி வருவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் தலைமையில் மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் நாகரத்தினம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு அருள், முதன்மை போலீசார் மனோகர், மகேஷ், பாலகுரு ஆகியோர் ஆக்கூர் முக்கூட்டு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
672 மதுபாட்டில்கள்
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் 672 புதுச்சேரி மதுபாட்டில்கள், 220 லிட்டர் கொண்ட 300 பாட்டில் சாராயம் ,11 சாராய மூட்டைகள்', 230 சாராய பாக்கெட்டுகள், இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான காரையும்,ரூ.1 லட்சம் மதிப்பிலான 672 மதுபாட்டில்கள் மற்றும் 220 லிட்டர் பாண்டி சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்த மயிலாடுதுறை அருகே பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராமமூர்த்தி மகன் ராஜேஷ்(வயது 42) என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் காரைக்காலில் இருந்து சீர்காழி பகுதிக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. யாருக்காக கடத்தலில் ஈடுபட்டார் சாராய வியாபாரி யார் என்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.