< Back
மாநில செய்திகள்
ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 66 பேர் ஆன்மிக பயணம் புறப்பட்டனர்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 66 பேர் ஆன்மிக பயணம் புறப்பட்டனர்

தினத்தந்தி
|
23 Feb 2023 12:15 AM IST

தமிழக அரசு ஏற்பாட்டில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக நேற்்று 66 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

தமிழக அரசு ஏற்பாட்டில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக பயணமாக நேற்்று 66 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

முதல்-அமைச்சர் அறிவிப்பு

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலானது, இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோவில்களில் முக்கியமானது.

அதுபோல் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு 200 பக்தர்கள் அரசு ஏற்பாட்டில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு சட்டசபையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்திற்காக ரூ.50 லட்சம் நிதியும் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தர்களை அழைத்துச் செல்லும் முதல்கட்ட ஆன்மிக பயணம் நேற்று ராமேசுவரத்தில் இருந்து தொடங்கியது.

66 பேர் புறப்பட்டனர்

இதற்காக அறநிலையத்துறையின் 6 மண்டலங்களான திருச்சி, திண்டுக்கல், தஞ்சாவூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் 66 பக்தர்கள் நேற்று காலை ராமேசுவரம் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோவிலுள்ள தீர்த்த கிணறுகளிலும் நீராடினர். கோவிலில் சாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.

இதை தொடர்ந்து உபகோவில்களுக்கும் தரிசனம் செய்ய அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் நேற்று மாலை 5 மணி அளவில் ராமேசுவரத்தில் இருந்து அரசு பஸ் மற்றும் வேன் மூலம் விழுப்புரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக அவர்கள் புறப்படும்போது, தங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இந்த ஆன்மிக பயணத்தை கோவிலின் துணை ஆணையர் மாரியப்பன் தொடங்கி வைத்தார். உதவி ஆணையர் பாஸ்கரன், நேர்முக உதவியாளர் கமலநாதன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன், காசாளர் ராமநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இன்று(வியாழக்கிழமை) காலை விழுப்புரம் சென்றடையும் இந்த பக்தர்கள் அங்கிருந்து காசிக்கு ரெயில் மூலம் புறப்பட்டு செல்கின்றனர்.

26-ந்தேதி அன்று காசியில் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து ரெயில் மூலம் புறப்பட்டு விழுப்புரம் வருகிறார்கள். அங்கிருந்து அரசு பஸ் மூலம் வருகின்ற 28-ந் தேதி அன்று ராமேசுவரம் அழைத்து வரப்பட்டு. இவர்கள் காசி ஆன்மிக பயணம் நிறைவு பெறுகிறது.

தொடர்ந்து 2-வது குழுவாக வருகி்ற 1-ந் தேதி 67 பேரும், 3-வது கட்டமாக 8-ந்தேதி அன்று 67 பேரும், ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இந்த தகவலை ராமேசுவரம் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்