தென்காசி
வெறிநாய்கள் கடித்து குதறியதில் பெண்கள் உள்பட 66 பேர் காயம்
|பனவடலிசத்திரம், புளியங்குடி பகுதிகளில் வெறிநாய்கள் கடித்துக் குதறியதில் பெண்கள் உள்பட 66 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே உள்ள சிவகாமியாபுரம் பகுதியில் நாய் ஒன்று வெறி பிடித்து அப்பகுதியில் உள்ள மாடுகளை கடித்துக்குதறியது. பின்னர் மருதங்கிணறு, ஆராய்ச்சிபட்டி, ஆயாள்பட்டி, குருக்கள்பட்டி, நடுவக்குறிச்சி, தர்மத்தூரணி, சூரங்குடி, பெரிய கோவிலாங்குளம், பனவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலையில் நடந்து சென்றோரையும், மாடுகளையும் கடித்தது.
50 பேர் காயம்
குருக்கள்பட்டியில் பால் வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோரை கடித்தது. இதையடுத்து அங்கு ஆட்டோவில் தெருத்தெருவாக சென்று, 'வெறிநாய் சுற்றித்திரிகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருங்கள்' என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தனர். இந்த வெறிநாய் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட மாடுகளும் காயம் அடைந்தன. காயம் அடைந்த அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சிலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
குருக்கள்பட்டியை சேர்ந்த பாப்பா (வயது 45), தாயாத்தாள் (75), முத்தத்தாள் (75), தனலட்சுமி (35), அன்னத்தாய் (55), ராஜ்குமார் (52), வேலுச்சாமி (70), அய்யம்மாள் (42), வெள்ளத்துரை (57) மற்றும் 7 வயது சிறுமி, சின்னகோவிலான்குளத்தை சேர்ந்த மாணிக்கத்தாய் (50), தர்மத்தூரணியை சேர்ந்த மாரிச்சாமி (55), பார்வதி (50) மற்றும் 7 வயது சிறுவன் ஆகியோர் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எம்.எல்.ஏ. ஆறுதல்
தகவல் அறிந்து ஆஸ்பத்திரிக்கு சென்ற தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அதிக பாதிப்பு அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை குடிமை மருத்துவர் செந்தில்சேகரிடம் கேட்டறிந்தார். மேலும் வெறிநாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். அப்போது மேலநீலதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை மற்றும் பலர் உடன் இருந்தனர்.
புளியங்குடி
இதேபோல் புளியங்குடி நகராட்சி பகுதியில் நேற்று அதிகாலை நடை பயிற்சியில் ஈடுபட்டவர்கள் மற்றும் விவசாய பணிகளை மேற்கொள்ள சென்றவர்களை வெறிநாய் கடித்து குதறியது. இதில் சேதுராமன் (60), மாரியப்பன் (62), மாடசாமி (70), சுப்பையா (60), குருவம்மாள் (70), மைதாம்பாள் (50), பாப்பா (55), தெய்வானை (80), நகராட்சி துப்புரவு பணியாளர் மலர் (38) உள்பட 16-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அவர்கள் புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை நகராட்சி தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தலைமை மருத்துவர் யாசர், மருத்துவர்கள் பிரியதர்ஷினி, திருமலை ராதிகா, நகராட்சி மேலாளர் செந்தில், சுகாதார ஆய்வாளர் கணேசன், களப்பணி உதவியாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர். இதற்கிைடயே வெறிநாயை பிடிப்பதற்கு நகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.