< Back
மாநில செய்திகள்
இலங்கைக்கு கடத்த முயன்ற 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் சிக்கின
மாநில செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் சிக்கின

தினத்தந்தி
|
13 Dec 2023 4:49 AM IST

இலங்கைக்கு கடத்த முயன்ற 65 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல்காரர்கள் மூலம் சில பொருட்கள் கடத்திச்செல்லப்படுவதாக மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதைதொடர்ந்து, நேற்று காலையில் வேதாளைக்கும்-மண்டபத்திற்கும் இடைப்பட்ட தென்கடலான மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கடலோர காவல் படையின் ரோந்து கப்பலை பார்த்ததும் நாட்டுப்படகு ஒன்றில் இருந்த கடத்தல்காரர்கள் அந்த படகை வேகமாக செலுத்தியுள்ளனர். கடலோர காவல் படையினரும் அந்த படகை விரட்டிச்சென்றனர்.

65 ஆயிரம் மாத்திரைகள்

இதற்கிடையே படகை திருப்பி அதில் இருந்தவர்கள், வேதாளையை நோக்கி வந்தனர். பின்னர் படகை வேதாளை அருகே உள்ள கடற்கரை பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிவிட்டனர். கடலோர காவல் படையினர் அந்த நாட்டுப்படகில் ஏறி சோதனை செய்தனர்.

அதில், அட்டை பெட்டிகளில் ஏராளமான மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. அந்த மாத்திரை பார்சல்களை கைப்பற்றி சோதித்து பார்த்ததில், சுமார் 65 ஆயிரம் மாத்திரைகள் இருந்தன. இவை வலி நிவாரணியாக பயன்படுத்தக்கூடிய மாத்திரைகள் என்பதும், இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் எனவும் தெரியவந்தது.

தீவிர விசாரணை

இலங்கையில் கொரோனா காலத்துக்கு பிறகு மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் அங்கு மாத்திரைகளுக்கு விலை அதிகம் என்பதால், கடத்தல்காரர்கள் இந்தியாவில் குறைந்த விலைக்கு இந்த வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி இலங்கைக்கு கடத்துவதற்காக நாட்டுப்படகில் ஏற்றிச்செல்ல முயன்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட படகு யாருக்கு சொந்தமானது? தப்பியோடிய கடத்தல்காரர்கள் யார்? என்பது குறித்து இந்திய கடலோர காவல் படையினர், உளவு பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் மண்டபத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்