விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54 சதவீத வாக்குகள் பதிவு
|விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது.
நாகர்கோவில்,
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம்- புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுடன், விளவங்கோடு தொகுதிக்கும் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடைபெற்றது.
விளவங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், பா.ஜனதா சார்பில் நந்தினி, அ.தி.மு.க. சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி மற்றும் 6 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கும் சேர்த்து மொத்தம் 272 வாக்குச்சாவடிகள் இந்த தொகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடம் பெற்றுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 741 வாக்காளர்கள் நாடாளுமன்றத்துக்கு ஒரு வாக்கையும், சட்டமன்றத்துக்கு ஒரு வாக்கையும் என ஒவ்வொரு வாக்காளரும் 2 வாக்குகளை செலுத்தினர்.
இந்த நிலையில், விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு சதவீதம் குறித்து காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.