மதுரை
மதுரையில் குற்றச்சம்பவங்களை தடுக்க ரோந்து பணிக்கு 63 மோட்டார் சைக்கிள்கள்- 24 மணி நேரமும் போலீசாருக்கு சுழற்சி முறையில் பணி
|மதுரையில் குற்றச்சம்பவங்களை தடுக்க 63 மோட்டார் சைக்கிளில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
63 ரோந்து வாகனங்கள்
மதுரை நகரில் தல்லாகுளம், புதூர், செல்லூர், மதிச்சியம், திடீர்நகர் அண்ணாநகர், எஸ்.எஸ். காலனி, புதூர் உள்ளிட்ட 24 போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த போலீஸ் நிலையங்கள் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் மோட்டார் சைக்கிள் மூலம் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.
அதற்காக நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் உள்ள போலீசாருக்கு நவீன முறையில் சீரமைக்கப்பட்டுள்ள 63 ரோந்து மோட்டார் சைக்கிள்கள் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நேற்று மாலை வழங்கப்பட்டது. இதன் மூலம் ரோந்து செல்லும் பணியை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் போலீசாருக்கு ரோந்து வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் அவசர காலகட்டத்திலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ரோந்து வாகனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மைக் மூலம் அறிவுறுத்தல்
பின்னர் போலீஸ் கமிஷனர் லோகநாதன் நிருபர்களிடம் கூறும் போது, பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் போலீசார் எப்போதும் பொதுமக்கள் எளிதாக அணுக வேண்டும் என்பதற்காக ரோந்து வாகன போலீசார் சிறப்பாக செயல்பட உள்ளனர். இதற்காக 63 ரோந்து வாகனங்களில் போலீசார் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணியில் இருப்பார்கள். ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் இருந்து அந்தந்த ரோந்து வாகனங்களை பணிகளுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளோம்.
பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வாகனங்களில் உள்ளவர்கள் மைக் மூலம் உரிய அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். ரோந்து வாகனங்களில் எப்பொழுதும் ஒளிரும் விளக்குகள் எரிந்த படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அப்போதுதான் பொதுமக்களுக்கு ரோந்து வாகனம் பணியில் இருப்பது தெரியவரும் என்றார்.