அரியலூர்
ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கு முயன்ற இந்து முன்னணியினர் 63 பேர் கைது
|ஜெயங்கொண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடமுயன்ற இந்து முன்னணியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளு-முள்ளு ஏற்பட்டது. இதில் 63 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி
அரியலூர் மாவட்ட இந்து முன்னணி திருச்சி கோட்ட பொறுப்பாளர் ராஜசேகர் நேற்று ஜெயங்கொண்டம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுமார் 60-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் தேவாங்க நடுத்தெருவில் குவிந்திருந்தனர்.
அவர்கள் காந்தி பூங்காவிற்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்து அங்கிருந்து நான்கு ரோட்டுக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வழக்கத்துக்கு மாறாக போலீசார் சற்றும் எதிர்பாராத நிலையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தேவாங்க நடுத்தெருவில் இருந்து புறப்பட்டு சிதம்பரம் சாலைக்கு சென்று அங்கிருந்து நான்கு ரோட்டுக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்தனர்.
தள்ளு-முள்ளு
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 63 பேரை கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இந்து முன்னணியினர் நாங்கள் மறியலோ, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்ற வகையில் எதுவும் இடையூறு செய்யவோ மாட்டோம் நாங்கள் ஆர்ப்பாட்டம் மட்டும் தானே செய்யப் போகின்றோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் போலீசாருக்கும், இந்து முன்னணியினருக்கும் லேசான தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் நான்கு ரோடு பகுதிக்கு விடாமல் தடுத்து நிறுத்தி போலீஸ் வேன்களில் ஏற்றி சென்றனர். இதில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக முன்கூட்டியே செய்தி அறிந்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமானோர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.