திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்
|திருவள்ளூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
பனை மரங்களை பாதுகாக்கும் வகையிலும் பனை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பனை விதை வங்கி தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பனை தொழில் மற்றும் பனை உற்பத்தி குறித்த விழிப்புணர்வுகளை மாவட்ட அளவில் உள்ள மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழகத்திலேயே முதன்முதலாக பனை விதை வங்கி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பனை விதை வங்கி செயல்பட மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அதில் கும்மிடிப்பூண்டி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு போன்ற 3 ஒன்றியங்களில் அதிக அளவில் பனை மரங்கள் உள்ளன. அந்த ஒன்றியங்களில் கிடைக்க கூடிய பனை விதைகளை, மகாத்மா காந்தி தேசிய ஊரக பணியாளர்கள் மூலம் சேகரித்து ஒன்றிய அளவில் ஒரு பனை விதை வங்கியை உருவாக்கி அதன் மூலம் பனை விதைகளை சேகரித்த விவரங்கள் குறித்து வாரம் ஒரு முறை கணக்கெடுத்து, பின் விதைகள் தேவைப்படும் மற்ற ஒன்றியங்களில் இருக்க கூடிய ஊராட்சி நிர்வாகத்திற்கு பங்கிட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பனை வங்கியின் மூலம் இந்த ஒரு ஆண்டில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சம் பனை விதைகளை விதைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதுவரை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 100 ஊராட்சிகளில் பனை விதை வங்கி, மாவட்ட அளவில் ஒரு குழுவும், ஒன்றிய அளவில் குழுக்களும் அமைக்கப்பட்டு 62 ஆயிரம் பனை விதைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.