< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்

மாடு முட்டி 61 பேர் காயம்: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் 28 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் வழங்கப்பட்டது

தினத்தந்தி
|
17 Jan 2023 1:54 AM IST

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 28 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய காளைக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.


மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 28 காளைகளை அடக்கிய வீரருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது. சிறப்பாக விளையாடிய காளைக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விமரிசையாக நடக்கும்.

இதில் பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, பொங்கலையொட்டி நேற்று முன்தினம் நடந்தது. மாடுபிடி வீரர்கள் காலை 7.45 மணிக்கு வாடிவாசல் பகுதியில் நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், வெங்கடேசன் எம்.பி., மதுரை கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். சுமார் 950 காளைகள் வரை பதிவு செய்யப்பட்டிருந்தன.

ஆன்லைன் மூலம் 250 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். 11 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10 சுற்றுகளிலும் 3 மாடுகளுக்கு மேல் அடக்கிய வீரர்கள் மட்டும் இறுதிச்சுற்றில் பங்கேற்று காளைகளை அடக்கினர். ஒவ்வொரு காளையும் பல்வேறு பெயர்களில் அழைத்து வரப்பட்டன. முன்னதாக, காளைகளை வாடிவாசலுக்கு கொண்டு வருவதற்கு பல்வேறு கெடுபிடிகள் போடப்பட்டிருந்தன.

வரிசை வாரியாக டோக்கன் வழங்கப்பட்டிருந்தாலும், அதன்படி காளைகள் வாடிவாசலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், காளைகளை பதிவு செய்திருந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், லேசான தடியடி நடத்தி போலீசார் அங்கிருந்தவர்களை கலைத்தனர். அத்துடன் காளைகளின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வரிசைகளில் வரும்படி அறிவுறுத்தப்பட்டது.

61 பேர் காயம்

வீரர்களுக்கு சவால்விடுத்து வெற்றி பெற்ற காளைகளுக்கும், சவாலை சமாளித்து அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு சில காளைகள் திமிலை சிலிர்த்து மிரட்டிய போதும், மாடுபிடிவீரர்கள் அசராமல் சென்று அந்த காளைகளை அடக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.

காளைகளுடன் மல்லுக்கட்டிய சில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், காளைகளின் உரிமையாளர்கள், போலீசார் மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 61 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் போலீஸ்காரர், சிறுவன் உள்ளிட்ட 11 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம்-வெள்ளி காசுகள், மின்விசிறி, நாற்காலி, சைக்கிள், கட்டில், எவர்சில்வர் அண்டா, குக்கர் உள்ளிட்ட பரிசுப்பொருள்கள் வழங்கப்பட்டன. ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கார் பரிசு

சிறப்பாக விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் மதிப்பிலான காரையும், 17 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் 2-வது பரிசான மோட்டார் சைக்கிளையும் பெற்றனர். 13 காளைகளை அடக்கிய விளாங்குடி பாலாஜிக்கு 3-வது பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.

வீரர்களுக்கு சவால்விடுத்து பிடிபடாமல் வெற்றி பெற்ற காளைகளான காத்தனேந்தல் பகுதி காமேஷின் காளைக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனமும், வில்லாபுரம் கார்த்தி காளைக்கு 2-வது பரிசாக வாஷிங்மெஷினும், அவனியாபுரம் லோடுமேன் முருகன் காளைக்கு 3-வது பரிசாக பசுமாடும் வழங்கப்பட்டன.

முதல்-அமைச்சர் சார்பில்...

இதில் கார் பரிசை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், இருசக்கர வாகன பரிசை இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், பசுமாடு பரிசை மாநகராட்சி மேயர் இந்திராணி ஆகியோரும் வழங்கி இருந்தனர்.

பத்திரிகையாளர்கள் பகுதியில் நிறைய யூ-டியூப் செய்தியாளர்கள் வீடியோ எடுத்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். காளைகளை கொண்டு வரும் பகுதி, காளைகள் வெளியே செல்லும் வழி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும் செய்திகள்