நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் - சாமர்த்தியமாக தப்பித்த 60,000 முட்டைகள்
|நாமக்கல் மாவட்டத்தில், 3 லட்ச ரூபாய் மதிப்பிலான 60 ஆயிரம் முட்டைகளை ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழி முட்டை பண்ணையை தொடர்பு கொண்ட நபர், தன்னை சுரேஷ் என அறிமுகம் செய்து கொண்டு, 60 ஆயிரம் முட்டைகள் ஆர்டர் செய்துள்ளார்.
இதனையடுத்து, பண்ணையின் உரிமையாளர், மினி லாரியில் முட்டைகளை ஏற்றி, ஓட்டுநரிடம் முட்டைகளை ஆர்டர் செய்த நபரின் தொலைபேசி எண்ணையும் கொடுத்து அனுப்பியுள்ளார். லாரி ஓட்டுநரை தொடர்பு கொண்ட அந்நபர், ரங்கநாதபுரம் அருகே ஒரு கடைக்கு முட்டைகளை கொண்டு வருமாறு கூறியுள்ளார்.
அங்கு சென்றதும், முட்டைகளை இறக்கி வைத்த ஓட்டுநர், பணம் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பணத்தை, பண்ணை உரிமையாளருக்கு 3 நாள்களுக்கு பின்னர் தான் அனுப்ப முடியும் எனக் கூறியுள்ளார், அந்நபர். இதனால் சந்தேகமடைந்த ஓட்டுநர், சூலூர் காவல் நிலையத்திற்கு புகாரளித்துள்ளர்.
இது குறித்து விசாரித்த போலீசார், முட்டையை ஆர்டர் செய்த நபர் போலியாக ஆர்டர் கொடுத்ததை அறிந்தனர். மேலும், ஆர்டர் செய்த நபரையும், முட்டைகளை கொள்ளையடிக்க முயன்ற கும்பலையும் போலீசார் தேடி வருகின்றனர். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான முட்டைகள் தப்பின.