செங்கல்பட்டு
ஊரப்பாக்கம் அருகே அரசு ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு - கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
|ஊரப்பாக்கம் அருகே அரசு ஊழியர் வீட்டில் புகுந்து 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி ராமர் தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 66). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த 23-ந் தேதி ராணிப்பேட்டையில் உள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் 25-ந் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 60 பவுன் தங்க நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நந்தகோபால் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.