< Back
மாநில செய்திகள்
நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரத்து 500 டன் அரிசி: தமிழக அரசு உத்தரவு
மாநில செய்திகள்

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரத்து 500 டன் அரிசி: தமிழக அரசு உத்தரவு

தினத்தந்தி
|
12 March 2023 12:35 AM IST

ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரத்து 500 டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளை போன்று இந்த ஆண்டும் (2023) ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இந்த ஆண்டு ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசியை வழங்க கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன்படி, 6 ஆயிரத்து 500 டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 25 கோடியே 63 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்