தமிழக மீனவர்கள் 6 பேர் கைது - இலங்கை கடற்படை அட்டூழியம்
|எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
சென்னை,
தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில், கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்துள்ளது. மேலும் அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் ராமேசுவரம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மீனவர்கள் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.