திருவள்ளூர்
திருத்தணியில் ஒரே நாளில் 6 ரவுடிகள் கைது
|திருத்தணியில் நேற்று ஒரே நாளில் 6 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவுடிகள் வேட்டை
தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் சற்று அதிகரித்து உள்ளது. இதையடுத்து இதுபோன்ற குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவின்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகள் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் திருத்தணி கோட்டத்தில் ரவுடிகள் வேட்டை நடைபெற்று வருகிறது.
6 பேர் கைது
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 6 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்ததாவது:-
திருத்தணி கோட்டத்தில் பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பொதட்டூர்பேட்டை, திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவலாங்காடு ஆகிய 6 போலீஸ் நிலையங்களில் 229 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்ளனர். இதில் அதிகபட்சமாக திருத்தணி போலீஸ் நிலையத்தில் 109 பேர் சரித்திர பதிவேடு குற்றவாளிகளாக உள்ளனர். இந்த ரவுடிகளை 4 வகையாக பிரித்து 204 பேர் மீது சரித்திர பதிவேடு பிணைய பத்திரம் போடப்பட்டுள்ளது.
மேலும் பழைய குற்றவாளிகள், பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருப்பவர்கள், கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் உள்பட குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அனைத்து ரவுடிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். ரவுடிகள் கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும்'
இவ்வாறு அவர் தெரிவித்தார்.