சேலம்
பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் கொள்ளை
|சேலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
சேலத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 6 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
தலைமை ஆசிரியர்
சேலம் அம்மாபேட்டை தாதம்பட்டி அருகே எஸ்.கே.நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி (வயது 55). இவர் பாப்பநாயக்கன்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு மனைவியுடன் சென்றுள்ளார்.
இந்தநிலையில் நேற்று மதியம் கிருஷ்ணசாமியின் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக சென்னைக்கு சென்றிருந்த கிருஷ்ணசாமிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக வீராணம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
6 பவுன் நகை, ரூ.80 ஆயிரம்
அதன்பேரில் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மற்றும் போலீசார் கொள்ளை நடந்த தலைமை ஆசிரியரின் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். இதனிடையே, சென்னையில் இருந்து கிருஷ்ணசாமி உடனடியாக சேலம் திரும்பினார்.
பின்னர் அவர் போலீசாருடன் இணைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு 6 பவுன் நகை, ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கிருஷ்ணசாமி குடும்பத்துடன் வெளியூர் சென்றதை மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தை கொள்ளைடியத்து சென்றுள்ளனர். இது குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.