கரூர்
பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
|குளித்தலை அருகே 6 பவுன் சங்கிலி பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண்
திருச்சி மாவட்டம், முசிறி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா (வயது 42). இவர் சம்பவத்தன்று மருத்துவமனை செல்வதற்காக முசிறியில் இருந்து குளித்தலைக்கு வந்துள்ளார். குளித்தலை சுங்ககேட் பகுதியில் அவர் நின்று கொண்டிருந்தபோது திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முக்தி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (25) என்பவர் அந்தப்பகுதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
பிரபா சுங்ககேட் பகுதியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்வதாக கூறி தனது மோட்டார் சைக்கிளில் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி பகுதியில் உள்ள சாந்திவனம் காவிரி ஆற்றுபடுகைக்கு கூட்டி சென்றுள்ளார்.
6 பவுன் சங்கிலி பறிப்பு
அப்போது அங்கு பதுங்கி இருந்த சக்திவேலின் உறவினரான சரவணன் (26), மற்றும் சக்திவேல் ஆகியோர் பிரபாவை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கசங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பிரபா கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, மருதூர் சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று சக்திவேல், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.