திருவள்ளூர்
தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம்
|தடுப்புச்சுவரில் கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
தடுப்புச்சுவரில் மோதியது
சென்னை கொளத்தூர் பத்மாவதி நகர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 65). இவரது மனைவி சுமதி (52), மகன் சதீஷ் (35), மகள் விஷ்ணுபிரியா (31). அதே பகுதியை சேர்ந்த தனது தம்பி சீனிவாசன் (52), தம்பி மனைவி சுசீலா (49) ஆகியோரை அழைத்து கொண்டு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் சென்றார்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த குன்னத்தூர் பகுதியில் கார் வரும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையின் ஓரத்தில் உள்ள சிறுபாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
6 பேர் படுகாயம்
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். கார் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவல் அறிந்ததும் கனகம்மா சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக சீனிவாசன் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.