திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த 6 பேர் கைது
|திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சுற்றித்திரிந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தெற்கு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படையினர் மத்திய பஸ் நிலைய பகுதியில் சுற்றித்திரிந்த வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக வந்த 6 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் இல்லை. விசாரணையில் அவர்கள் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு இவர்கள் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்துக்கு வடமாநில தொழிலாளர்கள் போல் வேலைக்கு வந்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் வேலை செய்தபோது, பனியன் நிறுவன தரப்பில் இருந்து இவர்களின் அடையாள ஆவணங்களை சரிபார்த்தபோது வங்கதேசத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர்களை வேலைக்கு அமர்த்தாமல் அங்கிருந்து அனுப்பி விட்டனர். இதைத்தொடர்ந்து 6 பேரும் பல்லடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியில் சேருவதற்காக மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்கள்.
அவர்கள் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கவுகாத்தியில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து திருப்பூர் வந்தது தெரியவந்தது. இதையடுத்து தன்வீர், ரசிப் தவுன், முகமது அஸ்லம், முகமது அல் இஸ்லாம், முகமது ராகுல் அமின், சவுமுன் ஷேக் ஆகிய 6 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.