< Back
மாநில செய்திகள்
ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு:  சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி
சேலம்
மாநில செய்திகள்

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு: சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
14 July 2022 2:52 AM IST

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்,

ஆக்கிரமிப்பு அகற்றம்

சேலம் மாவட்டம் வாழப்பாடி காளியம்மன் கோவில் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்தாயி (வயது 58). இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர்கள் ஏரி புறம்போக்கு நிலத்தில் வீடுகள் கட்டி உள்ளதாகவும், எனவே, நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் உள்ள அவர்களது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் பொக்லைன் மூலம் அகற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

இதற்கு முத்தாயி மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தவில்லை.

தீக்குளிக்க முயற்சி

இந்தநிலையில், மூதாட்டி முத்தாயி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த ஜெயக்கொடி (45), கவிதா (40), லட்சுமி (40), பிரியா (27), தமிழ்ச்செல்வன் (27) ஆகிய 6 பேரும் நேற்று மதியம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து விசாரித்தனர்.

அப்போது பல ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டி குடியிருந்து வந்த நிலையில் அந்த வீட்டை அதிகாரிகள் இடிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரையும் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக மூதாட்டி முத்தாயி உள்பட 6 பேர் மீது டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்