< Back
மாநில செய்திகள்
கதண்டுகள் கடித்து ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் காயம்
அரியலூர்
மாநில செய்திகள்

கதண்டுகள் கடித்து ஊராட்சி தலைவர் உள்பட 6 பேர் காயம்

தினத்தந்தி
|
26 Oct 2023 5:57 PM GMT

அரியலூர் அருகே கதண்டுகள் கடித்ததில் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

கதண்டுகள்

அரியலூர் மாவட்டம் சீனிவாசபுரம் தெற்குத்தெருவை சேர்ந்தவர் சின்னப்பா (வயது 82). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் மாடுகளுக்கு தீவனப்பயிர் அறுப்பதற்காக வீட்டின் அருகே உள்ள பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மாமரத்தில் கூடு கட்டி இருந்த கதண்டுகள் கலைந்து கூட்டமாக வந்து சின்னப்பாவை கடித்துள்ளன. இதில் வலியால் அலறிய சின்னப்பாவின் குரல் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்ற வந்துள்ளனர். அப்போது காப்பாற்ற வந்தவர்களையும் கதண்டுகள் கடித்தன.

6 பேர் காயம்

இதில் சின்னப்பா, புகழேந்தி(24), விஜயா(47), சாந்தி(55), கலைச்செல்வி(50), இவரது மகள் கனிமொழி (30) என 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் புகழேந்திக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 6 பேரும் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் கலைச்செல்வி சீனிவாசபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று மாலை அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார். மேலும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்