திண்டுக்கல்
தொழிலாளி கொலை வழக்கு; தந்தை-மகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பழனி மருத்துவர்நகரை சேர்ந்தவர் முத்தையா (வயது 45). கூலித்தொழிலாளி. இவர், கடந்த மாதம் பழனி-கொடைக்கானல் சாலை பகுதியில் நடந்து சென்றபோது 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி கொலை செய்தது. இதுதொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், முத்தையாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆண்டிச்சாமிக்கும் (46) இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இதனால் ஆண்டிச்சாமி, அவரது மகன் தீபக்குமார் (24), அதே பகுதியை சேர்ந்த முனிச்செல்வம் (30), பாண்டித்துரை (25) மற்றும் பழனி சுப்பிரமணியபுரம் சாலை பகுதியை சேர்ந்த விஜய் (26), ராமநாதன்நகரை சேர்ந்த சபரிநாதன் (25) ஆகியோர் சேர்ந்து முத்தையாவை கொலை செய்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் ஆண்டிச்சாமி உள்பட 6 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஆண்டிச்சாமி உள்பட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கலெக்டர் பூங்கொடிக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து ஆண்டிச்சாமி உள்பட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் பழனி போலீசார், ஆண்டிச்சாமி, தீபக்குமார் உள்பட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணையை மதுரை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.