திருநெல்வேலி
திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 6 பேர் கைது
|நெல்லை அருகே ஜெனரேட்டர் பேட்டரி, மோட்டார்கள் திருடிய வழக்கில் சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே முன்னீர்பள்ளம் தருவை முருகன்கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். விவசாயியான இவர் தருவையில் இருந்து திடியூர் செல்லும் ரோட்டில் சொந்தமாக இடம் வாங்கி அங்கு வீடு கட்டிவருகிறார். இதற்காக கட்டுமானத்திற்கு தேவையாக பொருட்கள் அனைத்தும் அங்கு கொண்டுவந்து பணிகள் மேற்கொண்டுவந்தார்.
இந்த நிலையில் அங்கு இருந்த ஜெனரேட்டர் பேட்டரி, நீர்மூழ்கி மோட்டார், 2 சென்ட்ரிங் இரும்பு பாக்ஸ், 4 மோட்டார்கள் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து முருகன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார்.
6 பேர் கைது
இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரை தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபர்களை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அதில் முன்னீர்பள்ளம் புதுகிராமம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ் (வயது 22), சங்கர் (26), பொன்னாக்குடியை சேர்ந்த வெற்றிவேல் (20), புதுக்குளத்தை சேர்ந்த செல்வசங்கர் (23), கீழமுன்னீர்பள்ளம் மேலத்தெருவை சேர்ந்த வானுமாமலை (23) மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டன.