< Back
மாநில செய்திகள்
தென்னிலை அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட 6 பேர் காயம்
கரூர்
மாநில செய்திகள்

தென்னிலை அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட 6 பேர் காயம்

தினத்தந்தி
|
19 July 2022 6:22 PM GMT

தென்னிலை அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 4 கிராம நிர்வாக அதிகாரிகள் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

அரியலூர் மாவட்டம், அரியலூர் காமராஜர் நகரைச் சேர்ந்த அருண்காந்தி (வயது 37), இவரது நண்பர்கள் வெற்றிவேல்(38), காமதேவன்(36), செல்வமுருகன்(25). இவர்கள் 4 பேரும் அரியலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் கோவை நோக்கி வந்துள்ளனர். கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் தென்னிலை அருகே உள்ள நல்லிபாளையம் பிரிவு அருகே வந்தபோது ஊட்டியில் இருந்து திருச்சி மார்க்கெட்டிற்கு கேரட் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் 4 பேரும் காயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் லாரியை ஓட்டிவந்த ஊட்டி கோத்தகண்டி வி.வோ.சி.நகரைச் சேர்ந்த கலைச்செல்வன்(42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் கரூர் மாவட்டம், தென்னிலை அருகே துக்காச்சி ஊராட்சி முரளையைச் சேர்ந்தவர் நாச்சிமுத்து(60), அதே பகுதியைச் சேர்ந்த அரண்மனை வீடு முத்துசாமி மனைவி பாக்கியலட்சுமி(32). இருவரும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது துக்காட்சி-காட்டம்பட்டி ரோட்டில் உள்ள துர்கா நகர் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தென்னிலை போலீசார் லாரியை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம், மின்னம்பாளையத்தைச் சேர்ந்த முரளி(34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்