< Back
மாநில செய்திகள்
போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்கப்பட்டதாக புகார்  ஒரே குடும்பத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி  சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்கப்பட்டதாக புகார் ஒரே குடும்பத்தில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

தினத்தந்தி
|
12 July 2022 2:23 AM IST

போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்கப்பட்டதாக கூறி ஒரே குடும்பத்தில் 6 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

தீக்குளிக்க முயற்சி

சேலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 66). இவருடைய மனைவி முன்சி, மகன் செல்வம் மற்றும் உறவினர்கள் செல்வி (40), சித்ரா (50), சிவகாமி (50), தவமணி (40), நந்தினி ஆகியோர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இதில், சிவகாமி, தவமணியை தவிர மற்ற 6 பேரும் தங்களது நிலத்தை சிலர் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துவிட்டதாக கூறி கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு நின்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். தீக்குளிக்க முயன்ற வெள்ளையன் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணைக்காக டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

போலி ஆவணம்

இதுகுறித்து வெள்ளையன் கூறுகையில், எங்களுக்கு சொந்தமான 40 சென்ட் நிலத்தை சிலர் போலி ஆவணங்களை தயாரித்து வேறு நபருக்கு விற்பனை செய்துவிட்டனர். இதுபற்றி எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை வலியுறுத்தி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்தோம். ஆனால் போலீசார் எங்களை தடுத்துவிட்டனர், என்றார்.

இதேபோல், சேலம் பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்தவர் குமார் (37). விவசாயியான இவர் தனது மனைவி சங்கீதா, 2 குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனையிட்டபோது, ஒரு பாட்டிலில் மண்எண்ணெயை ஊற்றி எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், நிலப்பிரச்சினை தொடர்பாக அந்த தம்பதி தீக்குளிக்கும் எண்ணத்தில் வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். இது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்