< Back
மாநில செய்திகள்
மரக்காணம் அருகேகள்ளச்சாராயம் குடித்த பெண் உள்பட 6 பேர் சாவு33 பேருக்கு தீவிர சிகிச்சை
விழுப்புரம்
மாநில செய்திகள்

மரக்காணம் அருகேகள்ளச்சாராயம் குடித்த பெண் உள்பட 6 பேர் சாவு33 பேருக்கு தீவிர சிகிச்சை

தினத்தந்தி
|
15 May 2023 12:15 AM IST

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட 33 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் கடற்கரையோரம் வம்பாமேடு என்ற பகுதி உள்ளது. இங்கு சிலர், அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மொத்தமாக கள்ளச்சாராயம் வாங்கி வந்து, அதனை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தனர்.

இதனை நேற்று முன்தினம் எக்கியார்குப்பம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்களான சங்கர் (வயது 52), சுரேஷ் (46), தரணிவேல் (50), மண்ணாங்கட்டி (47), இன்னொரு மண்ணாங்கட்டி (54), சந்திரன் (65) உள்பட 30-க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்தனர். இதில் சங்கர், சுரேஷ், தரணிவேல் உள்பட 6 பேர் அவர்களது வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அதி்ாச்சி அடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

3 பேர் பலி

அதன்படி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4 பேரும், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனை, காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்றனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சங்கர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரை தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த தரணிவேல் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுரேஷ் ஆகியோரும் நேற்று அதிகாலை அடுத்தடுத்து இறந்தனர்.

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் இறந்த சம்பவம் கிராம மக்கள் மற்றும் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் 100-க்கும் மேற்படட போலீசார் எக்கியார்குப்பம் கிராமத்தில் குவிந்தனர்.

மேலும் 3 சாவு

மேலும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட தெய்வமணி (35), செந்தமிழ் (35), கீர்த்திகை வாசன் (56), ரமேஷ் (52), ராஜமூர்த்தி (60), வீரானந்தன் (41), நவமணி(80), விஜயன் (63), தென்னரசன்(33), வேல்முருகன் (51), ராமு (75), மண்ணாங்கட்டி (60), ராமு மனைவி மலர்விழி(60) உள்பட 29 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர்கள் அனைவரும் விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் ராஜமூர்த்தி, மலர்விழி ஆகிய 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் மரக்காணம் அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் மரக்காணம் சம்புவெளி தெருவை சேர்ந்த சித்திரை மகன் மண்ணாங்கட்டி(46) என்பவரும் பலியானார். இதனால் கள்ளச்சாராயத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

33 பேருக்கு தீவிர சிகிச்சை

மீதமுள்ள 27 பேருக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரத்யேக அறையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 2 பேருக்கும், கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கும், மரக்காணத்தில் 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கிராம மக்கள் சாலை மறியல்

இந்தநிலையில் சாராயம் குடித்து இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் எக்கியார்குப்பம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் பூமிஸ்வரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் ஒன்று கூடினார்கள். பின்னர் அவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கள்ளச்சாராயம் விற்றவர்களை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.

உடனே போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். ஆனால் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனையை முற்றிலுமாக தடுக்க வேண்டும், சாராயம் விற்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆவேசமாக கோஷமிட்டனர். இந்த மறியலால் சென்னை-புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

கலெக்டர் பேச்சுவார்த்தை

இதற்கிடையே கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக விசாரணை நடத்த எக்கியார்குப்பம் வந்த மாவட்ட கலெக்டர் பழனி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாராய விற்பனையை தடுக்கவும், கள்ளத்தனமாக விற்பனை செய்தவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அமைச்சர்கள் ஆறுதல்

முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மரக்காணம் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதுபோல புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவரும், மாநில தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

குறிப்பு: கூடுதலாக ஒருவர் இறந்திருக்கிறார். கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்