< Back
மாநில செய்திகள்
ரூ.1,000 உரிமைத்தொகை பெற 6¼ லட்சம் பெண்கள் விண்ணப்பம்
திருச்சி
மாநில செய்திகள்

ரூ.1,000 உரிமைத்தொகை பெற 6¼ லட்சம் பெண்கள் விண்ணப்பம்

தினத்தந்தி
|
21 Aug 2023 1:58 AM IST

ரூ.1,000 உரிமைத்தொகை பெற 6¼ லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற்றது. இதில் லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர், தொட்டியம், மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய 7 தாலுகாக்களில் முதல் கட்ட பதிவு முகாம் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி கடந்த 4-ந்தேதி நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து 2-ம் கட்ட முகாம் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய 4 தாலுகாக்களில் கடந்த 5-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற்றது. இந்தநிலையில் இந்த முகாம்களில் பதிவு செய்ய தவறியவர்களுக்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் கடந்த 18-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.

6¼ லட்சம் பேர்

இறுதிநாளான நேற்று விண்ணப்பிக்கத்தவறிய பெண்கள் பலர் ஆர்வத்துடன் வந்து மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இந்த விண்ணப்ப பதிவின்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்து வந்திருந்தனர்.

முகாமுக்கு வந்த விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் நேற்று மாலை நிலவரப்படி 6 லட்சத்து 25 ஆயிரத்து 421 பேர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்