< Back
மாநில செய்திகள்
நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை
கடலூர்
மாநில செய்திகள்

நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

திட்டக்குடி அருகே நிதிநிறுவன ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே தொளார் குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவருடைய மனைவி பூங்கொடி(32). இந்த தம்பதிக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் துபாயில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

பூங்கொடி திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது குழந்தைகளுடன் பூங்கொடி வீட்டிலும், பூங்கொடியின் மாமனார் முத்துவேல் வீட்டின் முன்புறம் உள்ள திண்ணையிலும் தூங்கினர்.

ரூ.6 லட்சம் நகைகள் கொள்ளை

இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டும் அதில் இருந்த ரூ.43 ஆயிரம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் நகை, வெள்ளிக்கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து கொள்ளை நடந்த வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்