< Back
மாநில செய்திகள்
விவசாயி வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை கொள்ளை
விழுப்புரம்
மாநில செய்திகள்

விவசாயி வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை கொள்ளை

தினத்தந்தி
|
17 Sept 2023 12:15 AM IST

மேல்மலையனூர் அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.6¾ லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மலையனூர்

விவசாயி

மேல்மலையனூரை அடுத்த செவலபுரை அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி(59). விவசாயியான இவரும், இவரது மனைவியும் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றனர்.

பின்னர் மதியம் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியர் இருவரும் உடனே அறைக்குள் சென்று பீரோவை பார்த்தபோது அதில் இருந்த துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உள்ளே இருந்த நகைப்பெட்டியை பாா்த்தபோது அதில் இருந்த 15 பவுன் நகைகளை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை

ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பின் பக்க கதவை உடைத்து வீ்ட்டில் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத் தீ போல பரவியதால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். பின்னர் இது குறித்து சுப்ரமணி வளத்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்