< Back
மாநில செய்திகள்
வாலிபரை குத்தி கொன்ற 6 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

வாலிபரை குத்தி கொன்ற 6 பேர் கைது

தினத்தந்தி
|
26 May 2023 12:30 AM IST

உத்தமபாளையம் அருகே வாலிபரை குத்தி கொலை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

குத்திக்கொலை

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை அணைமேடு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். அவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சிலருக்கும் மாட்டு வண்டி பந்தயம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 24-ந்தேதி சதீஷ்குமார் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கோம்பை அரண்மனை வடக்கு தெருவில் அவர் வந்தபோது, மர்மகும்பல் வழிமறித்து தகராறு செய்தது. மேலும் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், மாட்டு வண்டியின் அச்சாணியை எடுத்து சதீஷ்குமாரை சரமாரியாக குத்தி கொலை செய்தனர். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பியோடி விட்டது.

6 பேர் கைது

இது குறித்து கோம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போடி போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியசாமி தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிலரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் செல்போன் எண்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதன் அடிப்படையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய கோம்பை கருக்கோடையை சேர்ந்த மணிகண்டன் (25), திரு.வி.க. தெருவை சேர்ந்த பிரவீன் (22), தீபக் (20), சிலைராஜா, விக்னேஸ்வரன், பிரபு ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசில் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதில் சதீஷ்குமாருக்கும், எங்களுக்கும் முன்விரோதம் இருந்தது. அவர் எங்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார். அதனால் அவரை நாங்கள் கொலை செய்தோம் என்று அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்