< Back
மாநில செய்திகள்
600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திய 6 பேர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திய 6 பேர் கைது

தினத்தந்தி
|
17 Sept 2023 12:15 AM IST

திண்டிவனத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியுடன் லாரியை கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம்

ரேஷன் அரிசி கடத்தல்

விழுப்புரம் அரியூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தனகோட்டி மகன் வெங்கடேசன்(வயது 29). இவருக்கு சொந்தமான லாரி தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக திண்டிவனம் உதயம்நகரை சேர்ந்த சையது சுல்பிக்கான் அலி என்பவர் ஓட்டி வருகிறார்.

கடந்த 2-ந் தேதி மாலை சையது சுல்பிக்கான் அலி முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 600 மூட்டை ரேஷன் அரிசியை லாரியில் ஏற்றிக் கொண்டு திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிப கழகம் குடோனுக்கு வெளியே நிறுத்தி விட்டு மற்றொரு லாரியை எடுத்து வருவதற்காக முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் மறுநாள் காலையில் திண்டிவனம் குடோனுக்கு சென்று பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை 600 ரேஷன் அரிசி மூட்டைகளுடன் யாரோ மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

லாரியில் இருந்த ஜி.பி.எஸ்.கருவி மூலமாக பார்த்தபோது அந்த லாரி மேல்பேரடிக்குப்பம் கிராமத்தில் சாலையோரம் நின்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரோஷனை போலீசாருடன் சென்று அந்த லாரியை மீட்டனர். லாரியில் 88 அரிசிமூட்டைகள் மட்டுமே இருந்தன. 512 மூட்டைகள் காணாமல் போயிருந்தது. இது குறித்து புகாரின் பேரில் ரோஷனை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர்.

வாகன சோதனை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தீவனூர் கூட்டுரோடு பகுதியில் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் இருந்தபோது வெள்ளிமேடு பேட்டையில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காணாமல் போன 512 ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அந்த லாரியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திண்டிவனம் சந்தைமேடு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் நின்ற லாரியை மேல்பேரடிக்குப்பம் கிராமத்துக்கு கடத்தி சென்று அதில் இருந்த 512 ரேஷன் அரிசி மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றி கர்நாடகாவுக்கு கடத்தி செல்லும் வழியில் போலீசாரிடம் சிக்கியது தெரியவந்தது.

6 பேர் கைது

இதையடுத்து இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு கமலாபுரம் பகுதியை சேர்ந்த ராம்கி(33), விழுப்புரம் விராட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த சையது முஸ்தபா(28), அயனம்பாளையம் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற இந்திய ராஜ்(30), பொன்னுசாமி என்கிற குணா(29), கந்தன்(40), விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த சையது அபுதாஹிர்(35) ஆகிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்