< Back
மாநில செய்திகள்
5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம்
மாநில செய்திகள்

5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
30 Jun 2023 12:15 AM IST

விழுப்புரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள், 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார், விழுப்புரம் ராஜீவ்காந்தி நகர் பகுதிக்கு விரைந்து சென்று அங்குள்ள வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் இருந்த 7 சாக்கு மூட்டைகளை சந்தேகத்தின்பேரில் பிரித்து பார்த்தபோது அந்த மூட்டையினுள் பாக்கெட், பாக்கெட்டுகளாக புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

4 டன் ரேஷன் அரிசி

பின்னர் அந்த புகையிலை பொருட்களை எண்ணி எடை பார்த்தபோது 110 கிலோ எடையில் 5,988 பாக்கெட் புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதேபோல் வீட்டின் மற்றொரு அறையை போலீசார் சோதனை செய்ததில் அந்த அறையினுள் 100 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை கைப்பற்றி பிரித்து பார்த்தபோது 4 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே வீட்டில் இருந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் விழுப்புரம் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த அனீபா மகன் அப்பாஸ் (வயது 50), தூத்துக்குடி பண்டாரவிளை பகுதியை சேர்ந்த தாசன் மகன் சிவா (42) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இனிப்பு கடைகளுக்கு வினியோகம்

இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வந்து அதனை வீட்டில் பதுக்கி வைத்துள்ளதும், இதனை விழுப்புரம் நகர்ப்புறங்களில் உள்ள கடைகளுக்கு வினியோகம் செய்தால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று கருதி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் விழுப்புரம் பகுதி மக்களிடமிருந்த குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து அதனை அரவை மில்லில் கொடுத்து அரைத்து பல்வேறு இனிப்பு கடைகளுக்கு வினியோகம் செய்து வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதையடுத்து ரூ.2½ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் 4 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அப்பாஸ், சிவா ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்