கடலூர்
ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு 59 பேர் தேர்வு
|ஊர்க்காவல் படை, கடலோர பாதுகாப்பு குழும பணிக்கு 59 பேர் தேர்வு செய்யப்பட்டனா்.
கடலூர்:
கடலூர் மாவட்ட ஊர்க்காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு இன்று கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் ஊர்க்காவல் படையில் உள்ள 24 பணியிடங்களுக்கு 522 பேர் விண்ணப்பித்திருந்தனர். கடலோர பாதுகாப்பு குழுமத்தில் உள்ள 35 பணியிடங்களுக்கு மீனவ இளைஞர்கள் 47 பேர் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் இன்று நடந்த தேர்வில் அனைவருக்கும் முதற்கட்டமாக உயரம் சரிபார்க்கப்பட்டது. மேலும் உடல் எடை, மார்பளவு அளக்கப்பட்டது. பின்னர் வாய்மொழி தேர்வு, ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. மேலும் தேர்வில் கலந்து கொண்டவர்கள் எந்தவித குற்ற வழக்குகளிலாவது ஈடுபட்டுள்ளார்களா? என்றும், சாதி மத அரசியல் மற்றும் எவ்வித சங்கத்திலும் உறுப்பினராக உள்ளாரா? என்றும் விசாரிக்கப்பட்டது. மேலும் கடலோர காவல் குழும பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடலில் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியின் அடிப்படையில் கடல் மணலில் ஓட்டம் நடத்தப்பட்டது. இதன் முடிவில் ஊர்க்காவல் படைக்கு 24 பேரும், கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு 35 பேரும் என மொத்தம் 59 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டு, பணி அமர்த்தப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் பணியும், ஊதியமாக ரூ.2,800-ம் (நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம்) வழங்கப்படும் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.