< Back
மாநில செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து விட்டன
சேலம்
மாநில செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து விட்டன

தினத்தந்தி
|
19 Sept 2023 1:32 AM IST

சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து உள்ளன.

சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து உள்ளன.

பறவை இனங்கள்

சேலம் பறவையியல் கழக நிர்வாகிகள் கணேஷ்வர், ஏஞ்சலின்மனோ மற்றும் பறவைகள் ஆர்வலர் கலைக்செல்வன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டத்தில் தற்போது வரை பதிவு செய்யப்பட்டு உள்ள சுமார் 350 பறவை இனங்களில் 316 பறவை இனங்களின் பாதுகாப்பு நிலை இந்த அறிக்கையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மதிப்பாய்வுகள் அனைத்தும் தேசிய அளவில் கணக்கிடப்பட்டு உள்ளன. 46 பறவைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. 75 பறவைகளுக்கு ஓரளவும், 195 பறவைகளுக்கு குறைந்த பாதுகாப்பும் தேவை.

சேலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 114 வகையான பறவை இனங்கள் குறைந்து வருகின்றன. 24 வகையான பறவை இனங்கள் அதிகரித்து வருகின்றன. 54 வகையான பறவைகளின் நிலை சீராக உள்ளன. அதேபோல் கடந்த 8 ஆண்டுகளில் 74 வகையான பறவை வகைகள் குறைந்து வருகின்றன. 23 வகைகள் அதிகரித்தும், 110 வகையான பறவைகள் நிலை சீராக உள்ளன.

குறைந்து விட்டன

கடந்த 30 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்து விட்டன. 8 ஆண்டுகளில் 36 சதவீத பறவைகள் குறைந்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வலசை வரும் வாத்துக்கள், கரையோர பறவைகளான உள்ளான்கள், இரைக்கொல்லி பறவைகள், வனப்பறவைகள் முதலியவை எண்ணிக்கையில் சரிந்து உள்ளன. சேலத்தில் முன்பு எளிதாக பார்க்க முடிந்த பறவைகள் தற்போது கண்டுபிடிப்பது சவாலாக மாறி விட்டன. அழிந்து வரும் பறவை இனங்களை மீட்டு உருவாக்கும் பணிகளை அறிவியல் பூர்வமாக செயல்படுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் பறவை நோக்கலில் ஈடுபட வேண்டும்.

வெண்புருவ வாத்து, தட்டைவாயன், ஊசிவால் வாத்து, சின்ன மணல் கொத்தி, பட்டாணி உப்புக்கொத்தி, கொசு உள்ளான், ஊசிவால் கோரைக்கொத்தி, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண்கொத்தி, பழுப்புத்தலை கடற்காகம், மீசை ஆலா, கரைக்கொக்கு, கரண்டிவாயன், பழுப்புத்தலை, பாம்புக்கழுகு, மஞ்சள் நெற்றி மரங்கொத்தி, சிவப்பு வல்லூறு, வானம்பாடி, கருப்பு வெள்ளை பூங்குருவி, நீலப்பூங்குருவி, நீலத்தலை பூங்குருவி, காட்டு வாலாட்டி, பெயிலான், கானாங்கோழி, மண்கொத்தி, ஆற்று ஆலா, வெண்கழுத்து நாரை, செந்தலை, வல்லூறு, பூமன் ஆந்தை வெண்பிடரி பட்டாணிக்குருவி, மஞ்சள் தொண்டை, சின்னான், கறுப்புச்சின்னான், செஞ்சிலம்பன், சீகாரப்பூங்குருவி, சிவப்பு வால் பூச்சிபிடிப்பான், காட்டு நீலக்குருவி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகளுககஅதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்