< Back
மாநில செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5,75,863 வாக்காளர்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெரம்பலூர் மாவட்டத்தில் 5,75,863 வாக்காளர்கள்

தினத்தந்தி
|
6 Jan 2023 12:15 AM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 5,75,863 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார்.

கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் தொகுதியில் 1,44,633 ஆண் வாக்காளர்களும், 1,52,655 பெண் வாக்காளர்களும், இதரர் (திருநங்கை) 6 வாக்காளர்களும் என மொத்தம் 2,97,294 வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 1,33,921 ஆண் வாக்காளர்களும், 1,37,563 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,71,484 வாக்காளர்களும் என பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 5,68,778 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

9,290 புதிய வாக்காளர்கள்

அதன் பின்னர் கடந்த மாதம் 8-ந்தேதி வரை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் 2,239 ஆண் வாக்காளர்களும், 2,510 பெண் வாக்காளர்களும் மற்றும் இதரர் 2 வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 2,207 ஆண் வாக்காளர்களும், 2,330 பெண் வாக்காளர்களும் மற்றும் இதரர் 2 வாக்காளர்களும் என மொத்தம் 9,290 புதிய வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் தொகுதியில் 479 ஆண் வாக்காளர்களும், 595 பெண் வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 500 ஆண் வாக்காளர்களும், 631 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,205 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

5,75,863 வாக்காளர்கள்

நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளில் 1,46,393 ஆண் வாக்காளர்களும், 1,54,570 பெண் வாக்காளர்களும், இதரர் 8 வாக்காளர்களும் என மொத்தம் 3,00,971 வாக்காளர்கள் உள்ளனர்.

இதேபோல் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளில் 1,35,628 ஆண் வாக்காளர்களும், 1,39,262 பெண் வாக்காளர்களும், இதரர் 2 வாக்காளர்களும் என மொத்தம் 2,74,892 வாக்காளர்கள் உள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,75,863 வாக்காளர்கள் உள்ளனர்.

பெண் வாக்காளர்களே அதிகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை விட இறுதி வாக்காளர் பட்டியலில் பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 3,677 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,408 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். திருநங்கை வாக்காளர்கள் இல்லாமல் இருந்த குன்னம் தொகுதியில் தற்போது புதிதாக 2 திருநங்கை வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் செய்திகள்