< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்-குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் 5,68,778 வாக்காளர்கள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பெரம்பலூர்-குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் 5,68,778 வாக்காளர்கள்

தினத்தந்தி
|
10 Nov 2022 12:12 AM IST

பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 5,68,778 வாக்காளர்கள் உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், ஏற்கனவே பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 3,05,617 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,76,988 வாக்காளர்களும் என மொத்தம் 5,82,605 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

சேர்ப்பு-நீக்கம்

அதன் பின்னர் நடைபெற்ற தொடர் திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் பெரம்பலூர் தொகுதியில் 475 ஆண் வாக்காளர்களும், 638 பெண் வாக்காளர்களும் மற்றும் 1 இதர (மூன்றாம் பாலினத்தவர்) வாக்காளரும், குன்னம் தொகுதியில் 327 ஆண் வாக்காளர்களும், 476 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயர்ச்சி காரணமாக பெரம்பலூர் தொகுதியில் 4,172 ஆண் வாக்காளர்களும், 5,242 பெண் வாக்காளர்களும், மற்றும் 23 இதர வாக்காளர்களும், குன்னம் தொகுதியில் 2,632 ஆண் வாக்காளர்களும், 3,659 பெண் வாக்காளர்கள் மற்றும் 16 இதர வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், என்றார்.

மொத்தம் 5,68,778 வாக்காளர்கள்

தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் 1,44,633 ஆண் வாக்காளர்களும், 1,52,655 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,97,294 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் 1,33,921 ஆண் வாக்காளர்களும், 1,37,563 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 2,71,484 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 2 சட்டமன்ற தொகுதிகளிலும் 2,78,554 ஆண் வாக்காளர்களும், 2,90,218 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும் என மொத்தம் 5,68,778 வாக்காளர்கள் உள்ளனர்.

டிசம்பர் 8-ந் தேதிக்குள்

இது தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்து மற்றும் ஆட்சேபனையை அடுத்த மாதம் (டிசம்பர்) 8-ந்தேதிக்குள் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து பொது மக்களுக்கு உதவி செய்திடவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஏதுவாக நாளது வரை வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திற்கும் தனிதனியாக வாக்குசாவடி முகவர்களை நியமனம் செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைத்திட தக்க ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டு கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்