தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிப்பு
|தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. திருப்பூர், கோவை, தேனி, நீலகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக பொது சுகாதாரத்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் 16-ம் தேதி (நேற்று) வரை 5,976 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 நபர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் டாக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சுற்றுப்புறத்தை பாதுகாத்தல், காய்ச்சல் பாதிப்பு இருந்தால், தாமதிக்காமல் டாக்டரிடம் பரிசோதித்து, உரிய சிகிச்சை பெற வேண்டும்; சுயமாக மருந்துகளை உட்கொள்வதால், வீரியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. அந்த தவறை மட்டும் யாரும் செய்ய என வேண்டாம் சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.