< Back
மாநில செய்திகள்
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 550 காளைகள்; 32 பேர் காயம்
திருச்சி
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த 550 காளைகள்; 32 பேர் காயம்

தினத்தந்தி
|
24 May 2023 2:39 AM IST

ஜல்லிக்கட்டில் 550 காளைகள் சீறிப்பாய்ந்தன. காளைகள் முட்டியதில் 32 பேர் காயமடைந்தனர்.

சமயபுரம்:

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தெற்கு ஈச்சம்பட்டியில் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டாக நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாமக்கல், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்ேவறு மாவட்டங்களில் இருந்தும் 550-க்கும் மேற்பட்ட காளைகளை, அதன் உரிமையாளர்கள் லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வந்தனர். இந்த காளைகளை அடக்க பல்வேறு ஊர்களில் இருந்தும் மாடுபிடி வீரர்கள் 200-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.

மண்ணச்சநல்லூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மதிவாணன் தலைமையிலான மருத்துவக்குழுவினரின் பரிசோதனைக்கு பின்னர், மாடுபிடி வீரர்கள் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் காளைகளை கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர். இதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டை மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி தொடங்கி வைத்தார்.

பரிசுகள்

முதலில் அதிகாரிகள் உறுதிமொழியை வாசிக்க அதைத்தொடர்ந்து வீரர்கள் உறுதி ஏற்றனர். பின்னர் வீரர்கள் தனித்தனி குழுவாக பிரித்து மைதானத்திற்குள் அனுப்பி வைக்கப்பட்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளம் காளையர்கள் விரட்டிப்பிடித்தனர்.

சில காளைகள் வீரர்களுக்கு சவால் விடும் வகையில் களத்தில் நின்று விளையாடியது. காளையர்கள், வீரத்துடன் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் வீரர்கள் பிடியில் சிக்காமல் தப்பி ஓடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சில்வர் பாத்திரம், சைக்கிள், ரொக்க பரிசு, பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

32 பேர் காயம்

மேலும் காளைகள் முட்டியதில் 32 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் படுகாயம் அடைந்த தம்மம்பட்டியை சேர்ந்த அசோக்குமார் (வயது 21), மருதூரைச் சேர்ந்த வாசு (23), நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியைச் சேர்ந்த ஹரிபாரதி (18), அன்பிலை சேர்ந்த பிரவீன்குமார் (21) ஆகிய 4 பேரும் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஜல்லிக்கட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமானவர்கள் கண்டு களித்தனர்.

மேலும் செய்திகள்