< Back
மாநில செய்திகள்
ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி
விருதுநகர்
மாநில செய்திகள்

ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி

தினத்தந்தி
|
18 July 2023 8:36 PM GMT

ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


ஓய்வுபெற்ற அரசு அதிகாரியிடம் 55 பவுன் நகை மோசடி செய்த தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அரசு அதிகாரி

ராஜபாளையம் துரைசாமி செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் பாலையா (வயது 64). இவர் வணிகவரித்துறையில் உதவி ஆணையராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவரது உறவினர்களான தெற்கு தேவதானம் பாரதிநகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி (37), அவரது கணவர் எமர்சன் என்ற எலியேசன் (47). இவர்கள் இருவரும் ராஜபாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பாலையாவிடம் நகை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக தெரிவித்தனர். இதையடுத்து பாலையா தனது பெயரிலும், தனது மகன் அமர்நாத்பெயரிலும் கடந்த 15.5.2019 முதல் 6.9.2021 வரை 55 பவுன் நகைகளை பல தடவைகளாக சாந்தகுமாரி மற்றும் எமர்சனின் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து ரூ. 8 லட்சத்து 64 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல்

ஓராண்டு கால தவணை முடிந்த பிறகு சாந்தகுமாரி, எமர்சன் ஆகியோரிடம் பாலையா பணத்தை பெற்றுக்கொண்டு நகைகளை திருப்பி தரும்படி கேட்டார்.

ஆனால் அவர்கள் இருவரும் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாலையா அவர்களது வீட்டிற்கு சென்று நகைகளை கேட்டபோது சாந்தகுமாரியும், எமர்சனும் பாலையாவை யார் என்றே தெரியாது என்று கூறிவிட்டு நகைகளை கேட்டு தொந்தரவு செய்தால் கூலிப்படையை ஏவி விட்டு கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

தம்பதி மீது வழக்கு

இதைதொடர்ந்து பாலையா விருதுநகர் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சாந்தகுமாரி, எமர்சன் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தார்.

கோர்ட்டு உத்தரவுப்படி சாந்தகுமாரி, எமர்சன் ஆகியோர் மீது மோசடி மற்றும் கொலை மிரட்டல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்