திருவாரூர்
ரூ.55½ லட்சத்தில் 648 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
|திருவாரூரில் 648 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55½ லட்சத்தில் உதவி உபகரணங்களை கலெக்டா் சாருஸ்ரீ, வழங்கினார்.
திருவாரூரில் 648 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55½ லட்சத்தில் உதவி உபகரணங்களை கலெக்டா் சாருஸ்ரீ, வழங்கினார்.
உதவி உபகரணங்கள்
மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தயாரிக்கும் அலிம்கோ நிறுவனத்தின் சார்பில் 648 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.55 லட்சத்து 40 ஆயிரத்து 533 மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் விஜயபுரத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் சாருஸ்ரீ, பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
3 சக்கர சைக்கிள்
மத்தியஅரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் ஆதிப் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாரிக்கும் அலிம்கோ நிறுவனத்தின் மூலம் கடந்த ஜனவரி மாதம் முகாம் நடத்தப்பட்டு மாற்றத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. அதன்படி 648 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், சக்கரநாற்காலிகள், ஊன்றுகோல்கள், நடைபயிற்சி உபகரணங்கள், ஸ்மார்ட் போன்கள், பிரெய்லிகேன், பிரெய்லிகிட், காதொலிகருவிகள், போன்ற உபகரணங்கள் 1,130 எண்ணிக்கையில் ரூ.55 லட்சத்து 40 ஆயிரத்து 533 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு திட்டங்கள்
இதற்கு அலிம் கோ நிறுவனத்துக்கும் திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகளின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் பாலசுப்ரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, இணை இயக்குனர் (நலப்பணிகள்) செல்வகுமார், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கார்த்திகா, மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் புவனா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், நகர்மன்ற உறுப்பினர் பிரகாஷ், அலிம்கோ துணை மேலாளர் அசோக்குமார் உள்பட பலா் கலந்து கொண்டனர்.