புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று திறப்பு
|புதுக்கோட்டை மாவட்டத்தில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளதாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாயி பவுன்ராஜ், ''கரும்பு விவசாயிகளுக்கு உரிய ஊக்கத்தொகையினை வழங்க வேண்டும். உளுந்து, நெல் விதைகள் உற்பத்தி செய்ததற்கான ஊக்கத்தொகையை வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு காப்பீட்டு திட்டம் அமல்படுத்த வேண்டும்'' என்றார். மகேந்திரன், ''பருவமழை தொடங்கும் முன்பே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்'' என்றார்.
ஆக்கிரமிப்பு அகற்றுதல்
கல்லணை கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் ரமேஷ், ''மணமேல்குடி காடை இடையாத்தூர் ஏரி வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், உரங்களின் விலை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்த நிலையில் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.'' இதேபோல் விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இதில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் உடனடியாக திறக்க வேண்டும். கும்பக்குடி அணையை தூர்வார வேண்டும். மதகுகளை சரி செய்ய வேண்டும். ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மழை காலம் தொடங்க உள்ள நிலையில் பயிர்களுக்கான காப்பீட்டை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நெல் கொள்முதல் நிலையங்கள்
கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளித்து பேசுகையில், விதை உற்பத்திக்காக ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும். விவசாயத்திற்கான உரங்கள் போதுமான வகையில் உள்ளன. பயிர் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கு உரிய தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மாவட்டத்தில் 55 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் திறக்கப்பட உள்ளன. மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 38 அணைக்கட்டுகளில் ரூ.8 கோடியே 6 லட்சம் செலவில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளன'' என்றனர்.
உரங்கள் இருப்பு
கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு பேசுகையில், ''மாவட்டத்தில் தற்போது யூரியா 2,565 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி. 850 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 626 மெட்ரிக் டன்னும், காம்ப்ளக்ஸ் 4,272 மெட்ரிக் டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் 416 மெட்ரிக் டன் யூரியா, 534 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 293 மெட்ரிக் டன் பொட்டாஷ், 1,190 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன'' என்றார்.
துண்டுபிரசுரங்கள்
கூட்டத்தில் பருவ மழைக்காலங்களில் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பில் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், அசோலா வளர்ப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த மடிப்பேடுகளை கலெக்டர் வெளியிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.