< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு எழுதினர்

தினத்தந்தி
|
24 July 2022 2:42 PM GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுதினர்

தூத்துக்குடி மாவட்டத்தில் 53 ஆயிரம் பேர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வை எழுதினர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வுக்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 63 ஆயிரத்து 298 பேர் எழுதுவதற்கு விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டத்தில் 10 இடங்களில் 223 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த தேர்வு நேற்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுபவர்கள் காலை 9 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்து இருந்தது. அதன்படி 9 மணிக்கு மேல் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தாமதமாக வந்த சிலர் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படாததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஹால்டிக்கெட்டுக்களை கிழித்து எறிந்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

53 ஆயிரம் பேர்

இந்த தேர்வு தொடர்ந்து மதியம் 12.30 மணி வரை நடந்தது. இதில் தூத்துக்குடியில் 20 ஆயிரத்து 64 பேரும், ஏரலில் 2 ஆயிரத்து 397 பேரும், எட்டயபுரத்தில் 1,698 பேரும், கயத்தாறில் 1,385 பேரும், கோவில்பட்டியில் 11 ஆயிரத்து 510 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 1,936 பேரும், சாத்தான்குளத்தில் 2 ஆயிரத்து 197 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 ஆயிரத்து 162 பேரும், திருச்செந்தூரில் 6 ஆயிரத்து 67 பேரும், விளாத்திகுளத்தில் 3 ஆயிரத்து 735 பேரும் ஆக மொத்தம் 53 ஆயிரத்து 151 பேர் தேர்வு எழுதினர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 ஆயிரத்து 237 பேர் தேர்வு எழுதவில்லை.

பறக்கும் படை

இந்த தேர்வு பணிகளை கண்காணிக்க 41 கண்காணிப்பு குழுக்களும், துணை ஆட்சியர் நிலையில் உள்ள 10 அலுவலர்களும், 18 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

தேர்வுக் கூடத்துக்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், ஸ்மார்ட் வாட்ச், தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள், குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.

மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள தேர்வு மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வு மையங்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்