பிறந்து 52 நாட்களே ஆன குழந்தைக்கு ஒரே நாளில் 3 தடுப்பூசி..! மறுநாள் குழந்தை இறந்த சோகம்... பெற்றோர் பரபரப்பு புகார்...!
|திண்டுக்கல் அருகே பிறந்து 52 நாட்களே ஆன குழந்தைக்கு ஒரே நாளில் 3 தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக பெற்றோர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். இவரது மனைவி சுகன்யா. இந்த தம்பதிகளுக்கு கடந்த 52 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு 45 நாட்களில் போட வேண்டிய தடுப்பூசியை பெற்றொர் போடாமல் இருந்துள்ளனர்
இந்த நிலையில குழந்தை பிறந்த 52-வது நாளான நேற்று ஆலம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள் பிள்ளையார்நத்தம்
குழந்தைகள் மையத்தில் அந்த குழந்தைக்கு 3 தடுப்பூசி போட்டுள்ளனர். குழந்தையின் இரண்டு தொடைகளில் 2 தடுப்பூசியும், கையில் ஒரு தடுப்பூசியும் போட்டனர். அப்போது, குழந்தை நன்றாக இருந்தாக பெற்றொர் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை குழந்தையின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனை கேட்டு கதறி அழுது பெற்றோர் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திண்டுக்கல் தாலுகாபோலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் கூறுகையில்,
குழந்தைக்கு ஒரே நாளில் 3 தடுப்பூசி போட்டுள்ளார்கள். ஒரு ஊசி தான் போட வேண்டும். 3 ஊசி போட்டதால் குழந்தை இறந்துவிட்டது. குழந்தை இறப்பில் மர்மம் இருக்கிறது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தையின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று கூறினர்.