< Back
மாநில செய்திகள்
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 51 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூர்
மாநில செய்திகள்

குடிபோதையில் வாகனம் ஓட்டிய 51 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

கடலூர் மாவட்டத்தில் போலீசார் விடிய விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 51 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்டத்திற்கும், புதுச்சேரி மாநிலத்திற்கும் எல்லையான ஆல்பேட்டை சோதனை சாவடியில் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பின்னர் அவர்கள் சாலையில் பேரி கார்டுகளை வைத்து, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த அனைத்து வாகனங்களையும் விடிய விடிய சோதனை செய்தனர். இதில் வாகன ஓட்டிகளை, மது அருந்தியதை பரிசோதனை செய்யும் கருவி மூலம் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 35 பேர், குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மதுபிரியர்கள் புலம்பல்

இதேபோல் சிலர் குடிப்பதற்காக இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஒன்றிரண்டு மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்தனர். அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், அதனை கீழே கொட்டி அழித்தனர். இதை பார்த்த மதுபிரியர்கள், பெட்டி பெட்டியாக கடத்தி வருபவர்களை விட்டுவிட்டு, குடிப்பதற்காக ஒன்று, இரண்டு பாட்டில்களை கொண்டு வந்தால் பறிமுதல் செய்கிறீர்களே என புலம்பியபடி சென்றதை காண முடிந்தது.

மேலும் மாவட்டம் முழுவதும் நடந்த வாகன சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 51 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்