ரஷிய மருத்துவ பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு
|இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கி உள்ளன.
புதுடெல்லி,
மருத்துவ கல்வி படிப்பில் உலக அளவில் ரஷியா 8-வது இடத்தை பெற்று திகழ்கிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை ரஷ்யா கடைப்பிடித்து வருவதாலும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதாலும், மருத்துவக் கல்வியைப் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா விருப்பமான தேர்வுகளில் முதன்மையாக உள்ளது.
2023-24-ம் கல்வியாண்டில் இந்திய மாணவர்களுக்கு 5 ஆயிரத்துகும் மேற்பட்ட மருத்துவ இடங்களை ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஒதுக்கி உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கான நேரடி மாணவர்கள் சேர்க்கை இன்றும் நாளையும் சென்னை, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி ரங்கா சாலையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சி நடந்தது. இந்தக் கண்காட்சியில் ரஷ்யாவின் முன்னணி கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. இதில் எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இன்று நடந்த கண்காட்சியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் ரஷியாவில் மருத்துவ படிப்பு படிப்பதினால் கிடைக்கும் நன்மைகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள்.