மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர் உள்பட போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் -ஐகோர்ட்டு உத்தரவு
|தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மயிலாடுதுறை இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு ஆகியோர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
மயிலாடுதுறையைச் சேர்ந்த மாணவர் அசோக், தனியார் நிறுவன ஊழியர் பிரவீன்பாபு. இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் உள்ள போலீஸ் பூத் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அப்போது அங்கிருந்த போலீஸ் ஏட்டு பாலுவுக்கும், இவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்துக்கு பிடித்து வந்து கொடூரமாக போலீசார் தாக்கியுள்ளனர்.
பின்னர், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல தங்களை தாக்கிய போலீசாருக்கு எதிராக அசோக்கும், பிரவீன்பாபுவும் புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
அதையடுத்து, தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர்கள் மீது பதிவான வழக்கை ரத்து செய்தார்.
போலீஸ் மீது வழக்கு
மேலும், 'தங்களை தாக்கிய போலீசார் மீது மயிலாடுதுறை போலீசில் மனுதாரர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அந்தப் புகாருக்கு முகாந்திரம் இல்லை என்று கூறி போலீசார் முடித்துவைத்து விட்டனர். எனவே, தங்களை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனுதாரர்கள் இருவரும் நிவாரணம் தேடிக்கொள்ளலாம்' என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி, போலீசார் மீது மயிலாடுதுறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பிரவீன்பாபு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மயிலாடுதுறை போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், பாபுராஜ், ஏட்டு பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
அபராதம்
இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எதிர்மனுதாரர் பிரவீன்பாபு சார்பில் வக்கீல் எம்.ஏ.அருணேஷ் ஆஜராகி, போலீஸ்காரர்கள் தாக்கல் செய்துள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.
அதையடுத்து, இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய நீதிபதி, 'வழக்கு தொடரப்பட்டுள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி நிவாரணம் பெற வழியிருந்தும், சட்டத்தை தவறாக பயன்படுத்தி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர். எனவே, மனுதாரர்கள் 4 பேருக்கும் ரூ.5 ஆயிரம் வழக்குச்செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை எதிர்மனுதாரர் பிரவீன்பாபுவுக்கு அவர்கள் வழங்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.