மழை வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம்? தமிழக அரசு பரிசீலனை என தகவல்
|மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் 3 மற்றும், 4-ந்தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் மழைவிட்டு 5 நாட்கள் ஆகியும் இன்னும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடிந்த பாடில்லை. எனினும், பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், மழை வெள்ள நிவாரண பணிகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தலைமை செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதனால், வெள்ள நிவாரண தொகையை தமிழக அரசு எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
அடுத்த சில தினங்களில் வெள்ள நிவாரணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின்போது குடிசைகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரமும் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. எனவே, பாதிப்புக்குள்ளான 4 மாவட்ட மக்களுக்கும் நிவாரண நிதியாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.