< Back
மாநில செய்திகள்
தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்
திருவாரூர்
மாநில செய்திகள்

தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்

தினத்தந்தி
|
7 Oct 2023 12:15 AM IST

கோட்டூர் அருகே தண்ணீர் இன்றி 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டூர்:

சம்பா சாகுபடி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதியைச் சேர்ந்த திருக்களர், சீலத்தநல்லூர், மீனம்ப நல்லூர், குறிச்சிமூலை, களப்பால், வெங்கத் தான்குடி, நாணலூர், விக்கிரபாண்டியம், கோட்டூர், புழுதிக்குடி, இருள்நீக்கி, தேவதானம், சித்தமல்லி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இந்த கிராமங்களில் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்யப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீரை கர்நாடக அரசு திறக்க மறுத்து வருவதாலும் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலையில் இருந்து வருகிறது.

மேட்டூர் அணை

இதனால் விவசாயிகள் மோட்டார் வைத்து குளங்களில் தண்ணீரை இறைத்து பயிர்களை பாதுகாத்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு வழக்கம் போல் டெல்டா சாகுபடிக்காக ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. பின்னர் கல்லணையில் இருந்து நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகள் உற்சாகத்துடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டனர். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பயிர்கள் கருகியது. இந்த பயிர்களை ஆடு, மாடு மேய்ச்சலுக்கு விட்டோம்.

கருகும் நெற்பயிர்கள்

இதை தொடர்ந்து பருவ மழையும், காவிரி தண்ணீரும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கம்பா சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டோம் இந்த நிலையில் 60 நாட்களான பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் பருவ மழை பொய்த்ததாலும், காவிரியில் உரிய நீரை திறந்து விடாததாலும் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலையில் வருகிறது. 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நாற்று நடவு செய்ய முடியாமல் சிரமம் அடைந்து வருகிறோம். ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை கடன் பெற்று செலவு செய்து சாகுபடி செய்துள்ளோம். குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக ரூ.65 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு, எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

நிவாரணம் வழங்க வேண்டும்

இரண்டு ஆண்டுகளாக பயிர் இன்சூரன்ஸ் தொகையும் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் வேளாண்மை துறை மூலம் இன்சூரன்ஸ் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்