< Back
மாநில செய்திகள்
விபத்துகளை தடுக்க பட்டாசு கடைகளில் 500 லிட்டர் தண்ணீர் தொட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

விபத்துகளை தடுக்க பட்டாசு கடைகளில் 500 லிட்டர் தண்ணீர் தொட்டி

தினத்தந்தி
|
6 Aug 2022 7:03 PM GMT

பட்டாசு கடைகளில் விபத்துகளை தடுக்க 500 லிட்டர் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை சிறப்பு குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சிவகாசி,

பட்டாசு கடைகளில் விபத்துகளை தடுக்க 500 லிட்டர் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை சிறப்பு குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சிறப்புக்குழு

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக மத்திய அரசின் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் கண்காணித்து விதிகளை மீறும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அது போல் பட்டாசு கடைகளில் ஏற்படும் விபத்துக்களை குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்து அதற்கென தனி அறிக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் 11 பேர் கொண்ட சிறப்பு குழுவை நியமித்தது.

இந்த குழுவினர் இதுவரை 5 முறை காணொலி மூலம் கலந்துரையாடி பட்டாசு கடைகளுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என விவாதித்தனர்.

தண்ணீர் தொட்டி

இந்த குழுவில் சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க (டான்பாமா) தலைவர் கணேசன் இடம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

விபத்து இல்லாமல் பட்டாசுகளை உற்பத்தி செய்வதும், விற்பனை செய்வது குறித்தும் இதுவரை ஆலோசிக்கப்பட்டது. இதில் வெளிநாடுகளில் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின் போது பட்டாசு கடைகளில் 10 மீட்டர் தூரம் பீய்ச்சி அடிக்கும் தீயணைப்பான் வைக்க வேண்டும். விபத்து காலத்தில் தீயணைப்புத்துறை, போலீஸ் ஆகியோருக்கு உடனே தகவல் தெரிவிக்க சிக்னல் லேயர் பொருத்த வேண்டும்.

தற்போது வரை பட்டாசு கடைகளில் தண்ணீர், மணல் ஆகியவற்றை வாளியில் வைத்து பயன்படுத்தப்படுகிறது. இதில் மாற்றம் செய்யப்பட்டு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும்.

அலாரம்

விற்பனையில் ஈடுபடும் தொழிலாளர்களும், கடையில் இருக்கும் உரிமையாளரும் பாதுகாப்பு பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். விபத்து காலங்களில் எச்சரிக்கை ஓசை (அலாரம்) எழுப்ப வேண்டும். எளிதில் தீப்பிடிக்காத மின்வயர்கள், சுவிட்சுகளை பயன்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை மத்திய அரசின் தொழில், வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு குழு தாக்கல் செய்துள்ள அறிக்கையை ஆய்வு செய்யும் மத்திய தொழில் வர்த்தக அமைச்சகம் பின்னர் பட்டாசு கடைகளுக்கு விதிக்க வேண்டிய புதிய விதிமுறைகளை குறித்து அறிவிக்கும் என கூறப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்