< Back
மாநில செய்திகள்
50 முறை மாநில அரசுகளை இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் கறுப்பு தினங்கள்: அண்ணாமலை
மாநில செய்திகள்

50 முறை மாநில அரசுகளை இந்திரா காந்தி டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் கறுப்பு தினங்கள்: அண்ணாமலை

தினத்தந்தி
|
9 Aug 2023 11:06 AM IST

டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

சென்னை,

டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மீது மாநிலங்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், இந்த மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார்.

டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள் என கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

தலைநகர் டெல்லியில் முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறைக்கு மாறாக டெல்லி சேவைகள் மசோதா எவ்வாறு வேறுபட்டு இருக்கிறது என்பதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டால்லின் அவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். நமது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்கள் இதை நேற்று பாராளுமன்றத்திலும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மாநில அரசுகளை, அரசியலமைப்பு சட்டத்தின் 356வது பிரிவைப் பயன்படுத்தி 90 முறை டிஸ்மிஸ் செய்தார்களே, அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் மட்டும் 50 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தாரே அவைதான் ஜனநாயகத்தின் உண்மையான கறுப்பு தினங்கள்.

1975ஆம் ஆண்டு, நாட்டில் எமர்ஜென்சி அறிவித்து ஜனநாயகத்தைப் படு குழியில் தள்ளிய இந்திரா காந்திக்கு, 1980ல் `நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என உங்களது தந்தை தமிழகத்தில் சிவப்புக் கம்பளம் விரித்தாரே அதுதான் ஜனநாயகத்தின் கறுப்பு நாள்.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம், இது வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது என்பதை மாநில உரிமைகளுடன் குழப்பிக் கொள்ளும் தமிழக முதல்வருக்கு யாராவது எடுத்து சொல்ல வேண்டும்.

மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகு வைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்